வியாழன், 19 டிசம்பர், 2013


எண்ணம் தூய்மையானால் எல்லையில்லா நன்மைகள்.

    இந்தியாவின் முதல் இஸ்லாமிய பல்கலைக்கழகமான தேவ்பந்த்தில் உள்ள தாருல் உலூமில் நான் கல்வி பயின்ற பொழுது அப்பல்கலைக்கழகத்தின்  வேந்தரான காரி முஹம்மத் தைய்யுப் ஸாஹிப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் மிஷ்காத் என்ற ஹதீத் நூலை ஓதினேன். சிறந்த சொல்லாற்றல் மிக்க அவர்கள் “இன்னமல் அஃமாலு பிந்நிய்யாத்”. செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையிலே என்ற ஹதீதிற்கு மூன்று நாட்கள் விளக்க உரை தந்தார்கள். அப்பொழுது சில நிகழ்ச்சிகளை குறிப்பிட்டார்கள். “நாம் செய்யும் செயல்கள் சாதரணமாக எல்லோரும் செய்யும் செயல்களாக இருந்தாலும், அது அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாக இருந்தாலும், அல்லாஹ்வை மகிழ்வு படுத்தும் என்ற நோக்கத்தோடு ஒரு செயலை செய்தால் அச்செயல்களுக்கு அநேகமான நன்மைகளை அல்லாஹ் கொடுக்க தயாராக இருக்கிறான். நபித் தோழர் அப்துல்லாஹிப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிக்கு செல்லும் முன்னும் பள்ளியிலிருந்து திரும்பி வரும் பொழுதும் வீட்டிற்கு செல்லும் தெருவில் வராமல் கடைத் தெருவை சுற்றிக் கொண்டு செல்வார்கள். இதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு நபித் தோழர் இடங்களில் மோசமானது கடைத் தெரு என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்க நீங்கள் ஏன் கடைத் தெரு வழியாகவே செல்கிறிர்கள் எனக் கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அமல்களில் சிறந்தது அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் சொல்வது, என்று கூறியுள்ளார்கள் எப்பொழுதும் வழமையாக செல்லும் தெருவில் சென்றால் ஏற்கனவே அறிமுகமானவர்களுக்கு தான் ஸலாம் சொல்ல முடியும். கடைத்தெரு என்பது பல்வேறு பகுதிகளில் இருந்தும் புதிது புதிதாக ஆட்கள் வருவார்கள். எனவே, ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன ஹதீதை அங்கே தான் செயல் படுத்த முடியும்.எனவே, தான் நான் கடைத் தெரு வழியாக செல்கிறேன் என்று சொன்னார்கள்.

  பார்த்தீர்களா! எப்பொழுதாவது நாம் கடைத்தெரு செல்லும் பொழுது கூட நன்மைகள் பெற முடியும் என்று சிந்தித்து பார்த்திருக்கிறோமா? ஒருவன் கடைத் தெருவிற்கு சென்றால் அழகான பெண்களைப் பார்க்கலாம், எனும் நோக்கோடு சென்றால் அங்கு அவனுக்கு பாவம் எழுதப்படுகிறது. கடைத் தெருவிற்கு செல்ல வேண்டிய தேவை இருந்தும் அங்கே அனாச்சாரமான செயல்கள் நடைபெறுகிறது எனக் கேள்விப்பட்டு அவர் வீட்டிலேயே இருந்துவிட்டார் என்றால் அதற்கும் நன்மைகள் எழுதப்படுகிறது. எனவே, நாம் கடை தெருவிற்கு செல்லும் பொழுது பார்க்கின்ற அனைவருக்கும் ஸலாம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு புறப்பட்டோம் என்று சொன்னால் அதற்கு தனியாக நமக்கு நன்மைகள் எழுதப்படுகின்றன.

    நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர் இமாம் ஜாபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் ஆன்மிக பெரியார்கள் எல்லாம் இவ்வுலகில் குறைவான சுகத்துடனே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மெலிதான ஆடைகளை அணியாமல் முரட்டுத்தனமான ஸூஃப் என்று சொல்லப்படும் உல்லன் ஆடைகளையே அணிவார்கள். இதனால் தான், அவர்களுக்கு ஸூஃபியாக்கள் என்று சொல்லப்படுகிறது. பெரும் செல்வந்தராக இருந்த இமாம் ஜாபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அனுமதிக்கப் பட்ட உயர்ரக ஆடைகளே அணிவார்கள். அதைக் கண்ட ஒருவர் நீங்கள் ஆன்மிக பெரியாராக இருந்தும் இவ்வுலக சுகத்திற்கு ஆசைப்படுகிறீர்களே என்றார். அதற்கு இமாம் அவர்கள் அணிந்திருந்த சட்டையை கழட்டினார்கள். உள்ளே, முரட்டுத்தனமான உல்லன் ஆடையையே அணிந்திருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ் எனக்கு செல்வத்தை அளித்திருக்கிறான் நான் எளிய ஆடையை அணிந்து சென்றால் என்னை ஏழை என்று நினைத்து யாரும் என்னிடத்தில் உதவி கேட்க மாட்டார்கள். நான் செல்வந்தர் என்று காட்டுவதற்காக வேண்டி நான் உயர்ரக ஆடைகளை அணிகிறேன். அதைப் பார்த்து, இவர் செல்வந்தர் என்று நினைத்து என்னிடத்தில் உதவி கேட்பார்கள். இவ்வுலகில் குறைவான சுகம் பெற வேண்டும் என்பதற்காக தான் முரட்டு ஆடையை உள்ளே அணிந்து இருக்கிறேன் என்றார்கள்.

    ஆடை அணிவதிலும் அபரிதமான நன்மையை பெறலாம், தூய எண்ணம் இருந்தால். காரி தய்யுப் சாஹிப் அவர்கள் இன்னொரு பெரியாரைப் பற்றி சொன்னார்கள் அவரின் பெயர் மறந்து விட்டது. வணக்கசாலியான அவர் பெரும் செல்வந்தராகவும் இருந்தார். தான தர்மங்கள் செய்பவராக இருந்தார். அவர் திடீரென அதிகமான புது ஆடைகளை வாங்க ஆரம்பித்தார். அவைகளை ஓரிரு முறை உபயோகித்து விட்டு அப்படியே பெட்டியில் வைத்து விடுவார். இதை கவனித்து கொண்டிருந்த அவரின் நண்பர் என்ன வீண் ஆடம்பரம் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர் எனக்கு மவ்த் நெருங்கி விட்டதாக நான் உணர்கிறேன். என் மவ்த்திற்குப் பின்னால் என் வாரிசுகள் எந்த அளவிற்கு தர்மம் செய்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நமது ஊரில் ஒரு வழக்கம் இருக்கின்றது. மவ்த்தானவர்களின் ஆடையை குடும்பத்தார் அணியாமல் ஏழைகளுக்கு கொடுத்து விடுவார்கள். எனவே, என் மவ்த்திற்குப் பின்னால் ஏழைகள் என் ஆடையை அணிய வேண்டும் என்பதற்காக தான் இது போன்று நான் ஆடைகளை வாங்குகிறேன் என்று சொன்னார்.

   ஒரு மாணவர் தான் கட்டிய புதிய வீட்டிற்கு தனது ஆசிரியரை அழைத்து சென்றார். அந்த வீட்டில் ஜன்னல்கள் உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஹஜ்ரத், ஏன் ஜன்னலை உயரமாக வைத்திருக்கிறாய் என்று கேட்டார்கள். நன்றாக காற்று வர வேண்டும் என்பதற்காக வைத்திருக்கிறேன் என்று அவர் சொல்ல, அடடா! ஒரு நன்மையை இழந்து விட்டாயே! உயரமான இடத்தில் ஜன்னலை வைத்தால் பள்ளியில் சொல்லப்படும் பாங்கு நன்றாக கேட்கும் என்ற நோக்கத்தோடு வைத்திருந்தால் நன்மையும் கிடைத்திருக்கும் காற்றும் தானாக வந்திருக்கும் என்று சொன்னார்.

     இவ்விதம் ஒவ்வொரு செயலிலும் அல்லாஹ்வின் திருப்தியை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்தால் இம்மை, மறுமை இரண்டிலும் நன்மைகளைப் பெறலாம்....................................

 

அனுமதிக்கப்பட்ட செயல்கள் அனைத்தும் வணக்கமே

இபாதத் என்ற வார்த்தையைத் தான் நாம் இங்கு வணக்கம் என்று சொல்கிறோம். மனிதன் தொழுகிறான் என்றால் ஒரு நாளைக்கு அதிகப்பட்சம் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் தொழலாம். தொழுவது மட்டுமே இபாதத், வணக்கம் என்றால் ஒரு வணக்கம் என்பது மிக குறுகிய நேரமே செய்யும் செயலாகி விடும். மனிதன் பலகீனத்தை அறிந்த அல்லாஹ் அவன் வாழ்கின்ற குறுகிய காலத்தில் அதிகமான நன்மையை பெற இலகுவான வழியை காண்பித்துள்ளான். அதுதான் அல்லாஹ்வின் திருப்தியை பெற வேண்டும் என எண்ணி செய்யும் செயல்கள்..

  நாம் அவசியம் என கருதி செய்யும் செயல்களை அல்லாஹ்வும் ரசூலும் காட்டி தந்த பாதையில் செய்தால் அது இபாதத் செய்த நன்மை கிடைப்பதுடன் இந்த உலகத்தில் கிடைக்க வேண்டிய பலனும் கிடைக்கிறது.

உமர் (ரலி) அவர்கள் செய்த உபதேசம்

 ஹளரத் உமர் (ரலி) அவர்கள் உடல் நலம் குன்றியிருந்த பொழுது அவரைச் சந்திக்க ஒரு இளைஞர் வந்தார். அவர் திரும்பிச் செல்ல முனைந்த பொழுது ஹளரத் உமர் (ரலி) அவர்கள் அவ்விளைஞரை திரும்ப அழைத்து, “சகோதரனே! உன்னுடைய ஆடையை உயர்த்திக் கொள். அது உன்னுடைய ஆடையைச் சுத்தமாக வைத்திருக்கும். மேலும், உன்னுடைய இரட்சகனையும் திருப்திப்படுத்தும்.” என்றார்கள். இங்கும் இரு நன்மைகள் கிடைக்கின்றன. “ மறுமை நாளில் மூன்று நபர்களை அல்லாஹ் கருணையுடன் பார்க்க மாட்டான்” என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறியுள்ளார்கள். அவர்களில் ஒருவன் தன் ஆடையை கரண்டைக் காலுக்கு கீழே பெருமையுடன் தொங்கவிட்டு நடப்பவன். அது இறைவனின் கோபத்திற்கு காரணமாக அமைகிறது. அவன் ஆடையை உயர்த்திக் கட்டி நடக்கும் பொழுது இறைவனின் கோபத்திலிருந்து அவன் விடுப்பட்டு அவனின் சந்தோஷத்திற்கு ஆளாகிறான். இது ஒரு நன்மை. மற்றொன்று மனிதனின் ஆடை பூமியிலிருக்கும் அழுக்குகளை விட்டும் சுத்தமாக இருக்கும்.

  ஆடையை உயர்த்திக் கட்டுவதில் இன்னொரு பெரிய நன்மை இருக்கிறது. வியாதியை உண்டாக்கும் கிருமிகள் பரவுவதற்கு ஆடையும் ஒரு காரணம் என மருத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக தரையில் சில விஷக் கிருமிகள் ஊர்ந்து திரிகின்றன. அவை மனிதனின் ஆடையின் மூல நேராக அவன் இதயத்தில் நுழைந்து விடுகின்றன. இது ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் அதிகம் என்றும் மருத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆடையை உயர்த்திக் கட்டுவது இது போன்ற நன்மைகளைத் தருகிறது. ஒருவன் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறும் நோக்குடன் ஆடையை உயர்த்திக் கட்டும் பொழுது இவ்வுலகின் நன்மையையும் சேர்ந்தே கிடைக்கின்றது.

   எனவே, ஒவ்வொரு செயலிலும் இரண்டு கண்ணோட்டங்கள் இருக்கின்றன. உங்களின் நோக்கம் எதன் பக்கம் அமைகிறதோ அதுதான் கிடைக்கும். இவ்வுலக பலனை பெறும் நோக்குடன் செயல்பட்டால் நாம் எண்ணியது மட்டுமே சில வேளை கிடைக்கும். கிடைக்காமலும் போகலாம். மறுமையில் ஒன்றுமே கிடைக்காது. மாறாக, மறுவுலக நலனை மனதில் வைத்து நாம் செயல்பட்டால், மறுமையின் பலன் மட்டுமல்ல இவ்வுலக பலனையும் பெற வழிக் வகுக்கிறது.

   எனவே தான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். மனிதனுக்கு கிடைப்பது எல்லாம் அவன் நாடிய அளவே என்றார்கள்.

 

இல்லாளுடன் இன்புற்று இருப்பதும் இபாதத்தே

   அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “உங்களின் மர்மஸ்தானத்திலும் தர்மம் இருக்கிறது” என்ற பொழுது வியப்படைந்த நபித் தோழர்களில் ஒருவர் “எங்களில் ஒருவர் தன் மன இச்சையினைப் பூர்த்தி செய்து கொள்ளும் நோக்குடன் தன் மனைவியை நெருங்குகிறார்   அதிலும் அவருக்கு நன்மை கிடைக்குமா என்ன? என வினவினார் “.அதே நீர் ஹராமான விலக்கப்பட்ட இடத்தில் விழுந்தால் பாவம் இல்லையா? அவன் அத்தகைய பாவத்தை விட்டும் நீங்கும் பொழுது அது இபாதத்தாக வணக்கமாகிவிடுகிறது என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எனவே தான் காம இச்சையைப் பூர்த்தி செய்வதிலும் இரு நோக்கங்கள் உள்ளன. ஒன்று வெறும் தன் மன இச்சையை நிறைவேற்றும் நோக்குடன் மனைவியை அணுகுவது. மற்றொன்று, “இறைவன் வகுத்த நியதிப்படி – முறை தவறி நடப்பதை விட்டும் – என்னைப் பாதுகாக்க என் மனைவியிடம் இன்பம் பெறுகிறேன்.” எனும் நோக்குடன் தன் மனைவியை அணுகுவது. இப்படி தன் நோக்கினைக் குறிப்பாக்கும்போழுது அது வணக்காமகிவிடுகிறது.      

 

சனி, 14 டிசம்பர், 2013


வழக்கமும்,வணக்கமும்

நாம் தினந்தோறும் செய்து வரும் செயல்களை – உண்ணல்,குடித்தல்,உறங்குதல்,உறவாடல்,வியாபாரம் செய்தல் போன்றவைகளையே வழக்கம் என்கிறோம். வணக்கம் என்று எதனைச் சொல்கிறோம்? இறையில்லம் சென்று தொழுதல், குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்தல், நோன்பு நோற்குதல் போன்ற நன்மை கிடைக்கும் எனக் கருதிச் செய்யும் செயல்களையே வணக்கம் என்கிறோம். ஒரு குறிப்பிட்ட செயல்களையே வணக்கம் என வரையறுத்து அதனை ஒரு வட்டத்திற்குள் ஆக்கி வணக்கத்தையும் வழக்கமாகிக் கொள்கிறோம். இது தவறான ஒன்று. வணக்கமாக கருதப்படும் ஒரு செயல் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படாமல் தூக்கி எறியப்படலாம். அதே நேரத்தில் ‘வழக்கம்’ என பிறர் எண்ணும் ஒரு செயல் இறைவனிடம் வணக்கமாக மாறி அச்செயலி னைச் செய்த மனிதனுக்கு அபரிதமான நன்மையைத் தரலாம். நாம் செய்கின்ற காரியங்கள் வணக்கமாகி அல்லாஹ்வின் பால் ஏற்றுக் கொள்ளப்பட என்ன செய்ய செய்ய வேண்டும் என்கிறீர்களா? விடை இலகுவானது.

   அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வழி முறையில் செய்யப்படும் அனைத்துச் செயல்களுமே வணக்கம்தான். பள்ளிக்குச் சென்று தொழுவதும், திக்ரு செய்வதும் தான் வணக்கம் என்றும், குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவது வியாபாரம், தொழில், போன்றவைகளில் ஈடுபடுவது வணக்க வழிபாடுகளில் சேராது என எண்ணுகிறோமே அது தவறு. இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் நாம் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய  வழிமுறையில் செயல்பட்டால் அதுவும் வணக்கமாகிவிடும். நம் எண்ணம் தான் முக்கியம். நோன்பை எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவன் பகல் முழுவதும் எவ்வித குறிக்கோளுமின்றி பசியும் பட்டினியுமாக பொழுதைக் கழித்தால் எவ்வித நன்மையையும் அவனுக்கு கிடைக்காது. ஆனால், அவனே அல்லாஹ்வின் ஆணைக்குக் கட்டுப்படும் எண்ணத்துடன் பசித்திருந்தால் அது இறைவனின் திருப்தியைப் பெற்று தருவதுடன் சிறந்த வணக்கமாக மாறிவிடுகிறது. இதனால் தான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்ததே” என்றார்கள். வழக்கங்கள் வணக்கமாக எவ்வளவு எளிய வழி பாருங்கள். நாம் இவ்வுலக காரியங்கள் என எண்ணுபவை மறுமையில் பலன்தரும் செயல்களாகி விடுகின்றன. எவ்வளவு லாபகரமான பரிமாற்றம்.

   துன்யா என்றால் என்ன?

 லால்பேட்டை அரபிக் கல்லூரியில் மாணவனாக நான் இருந்த பொழுது முப்தியுல்  அஃலம் ‘கைருல் மில்லத்’ அல்லாமா அப்துல்லாஹ் ஹஜ்ரத் (ரஹ்) அவர்கள். “துன்யாவை வெறுக்க வேண்டும். துன்யாவிற்காக வாழக் கூடாது என்கிறார்களே. துன்யா என்றால் என்ன? என எங்கள் வகுப்பில் கேட்டனர். இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது என்றார் ஒருவர். திருமணம் செய்து குடும்பம் நடத்துவது துன்யா என்றால் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அதனை ஏன் வலியுறுத்தியுள்ளார்கள் என்றார்கள் ஹஜ்ரத். பொருள் தேடுவது என்றார் மற்றொரு மாணவர். தொழுகை முடித்து விட்டால் பூமியெங்கும் பரவி அல்லாஹ்வின் அருளான பொருளைத் தேடுங்கள்” என குர்ஆன் கூறுகிறதே எனக் கூறி புன்னகை புரிந்தார்கள். ஒவ்வொரு மாணவரும் மனிதர்கள் விரும்பும் ஒவ்வொரு செயலினை  கூற அத்தனைக்கும் ஒரு  பதிலைக் கூறி அந்தச் செயலினை சரி தான் என்றார்கள். இறுதியில் பொறுமை இழந்த நாங்கள் தாங்களே சொல்லுங்கள் என்றோம்.

 “எவையெல்லாம் அல்லாஹ்வின் நினைவை விட்டும் உன்னை மறக்க வைக்கிறதோ அவையெல்லாம் துன்யா” என்றார்கள்.

  ஆம்! அல்லாஹ்வின் நினைவின்றி நாம் தொழுதால் அதுவும் துன்யா தான். வீண் பகட்டுக்காக தான தர்மம் செய்தால் அதுவும் துன்யா தான். அதற்கு மாற்றமாக மனிதன் அல்லாஹ்வின் நினைவுடன் அவன் திருப்தியைப் பெறும் நோக்குடன் செய்யும் காரியங்கள் அனைத்தும் மறுமைக்கானது. அதற்கான நன்மை உண்டு. அது வெளிரங்கத்தில்  இவ்வுலகத்திற்கான செயலாகத் தெரிந்தாலும் சரியே.

 உணவு உண்பதும் வணக்கமே

   உதாரணமாக ஹதீஸில் கீழ்கண்டவாறு வருகிறது. ஒருவன் அல்லாஹ்வின் பெயரால் என உணவு உண்ணத் துவங்கி அல்லாஹ்விற்கே அதிகமான புகழனைத்தும் என உண்ணுவதை முடித்தால்அவனுடைய முன்பின் செய்த சிறு பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ வெறும் எண்ணத்தினால் ஏற்படும் இரட்டை பலன்களைப் பாருங்கள். இவ்வுலக- துன்யாவின்- பலனான வயிறும் நிரம்பிவிடுகின்றது. மறுமை- தீனுடைய பலனான- பாவ மன்னிப்பும் கிடைக்கிறது. இஸ்லாம் விரும்புவதும் இதைத்தான். மிஸ்வாக் செய்வதை எடுத்துக் கொள்ளுங்கள்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மிஸ்வாக் செய்வது வாயை சுத்தப்படுத்துகின்றது. இரட்சகனின் திருப்திக்கும் காரணமாக இருக்கிறது” இங்கேயும் இம்மையில் உடனடிப் பயனான வாய் சுத்தம் ஏற்பட்டு மன மகிழ்ச்சி கிடைக்கிறது. மறுமையில் இறைவனின் சந்தோஷமும் நமக்கு கிடைக்கிறது. இவ்விதம் இஸ்லாத்தின் ஒவ்வொரு செயலிலும் ஒரு பாதை இவ்வுலக நன்மையை மனதிலிருத்தியும், மறுபாதை மறுமையின் பலனை முன்னிறுத்தியும் அமைந்துள்ளது.

   ஹலாலான முறையில் வியாபாரம் செய்து  வேண்டும்  சம்பாதித்து தன் குடும்பத்தை காப்பதுடன் ஜாக்கத்தும் கொடுக்க வேண்டும் எனு ம் நோக்குடன் ஒருவன் வியாபாரம் செய்தால் அதுவும் வணக்கம்தான்

எனவே தான் நேர்மையான வியாபாரி அர்ஷின் நிழ்லில் இருப்பார்

என ஹதீஸில் வந்துள்ளது
 இவ்வாறு அல்லாஹ்வின் திருப்தியை பெரும் நோக்குடன் செய்யப்படும் அல்லாஹ்  அனுமதித்த அனைத்து செயல்களும் வணக்கமே