எண்ணம் தூய்மையானால் எல்லையில்லா நன்மைகள்.
இந்தியாவின் முதல்
இஸ்லாமிய பல்கலைக்கழகமான தேவ்பந்த்தில் உள்ள தாருல் உலூமில் நான் கல்வி பயின்ற
பொழுது அப்பல்கலைக்கழகத்தின் வேந்தரான காரி
முஹம்மத் தைய்யுப் ஸாஹிப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் மிஷ்காத் என்ற ஹதீத் நூலை
ஓதினேன். சிறந்த சொல்லாற்றல் மிக்க அவர்கள் “இன்னமல் அஃமாலு பிந்நிய்யாத்”.
செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையிலே என்ற ஹதீதிற்கு மூன்று நாட்கள்
விளக்க உரை தந்தார்கள். அப்பொழுது சில நிகழ்ச்சிகளை குறிப்பிட்டார்கள். “நாம்
செய்யும் செயல்கள் சாதரணமாக எல்லோரும் செய்யும் செயல்களாக இருந்தாலும், அது
அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாக இருந்தாலும், அல்லாஹ்வை மகிழ்வு படுத்தும் என்ற
நோக்கத்தோடு ஒரு செயலை செய்தால் அச்செயல்களுக்கு அநேகமான நன்மைகளை அல்லாஹ் கொடுக்க
தயாராக இருக்கிறான். நபித் தோழர் அப்துல்லாஹிப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு
அவர்கள் பள்ளிக்கு செல்லும் முன்னும் பள்ளியிலிருந்து திரும்பி வரும் பொழுதும்
வீட்டிற்கு செல்லும் தெருவில் வராமல் கடைத் தெருவை சுற்றிக் கொண்டு செல்வார்கள்.
இதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு நபித் தோழர் இடங்களில் மோசமானது கடைத் தெரு என்று
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்க நீங்கள் ஏன் கடைத்
தெரு வழியாகவே செல்கிறிர்கள் எனக் கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு
அன்ஹு அவர்கள் சொன்னார்கள்: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
அமல்களில் சிறந்தது அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் சொல்வது, என்று
கூறியுள்ளார்கள் எப்பொழுதும் வழமையாக செல்லும் தெருவில் சென்றால் ஏற்கனவே
அறிமுகமானவர்களுக்கு தான் ஸலாம் சொல்ல முடியும். கடைத்தெரு என்பது பல்வேறு பகுதிகளில்
இருந்தும் புதிது புதிதாக ஆட்கள் வருவார்கள். எனவே, ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் சொன்ன ஹதீதை அங்கே தான் செயல் படுத்த முடியும்.எனவே, தான் நான்
கடைத் தெரு வழியாக செல்கிறேன் என்று சொன்னார்கள்.
பார்த்தீர்களா! எப்பொழுதாவது
நாம் கடைத்தெரு செல்லும் பொழுது கூட நன்மைகள் பெற முடியும் என்று சிந்தித்து
பார்த்திருக்கிறோமா? ஒருவன் கடைத் தெருவிற்கு சென்றால் அழகான பெண்களைப் பார்க்கலாம்,
எனும் நோக்கோடு சென்றால் அங்கு அவனுக்கு பாவம் எழுதப்படுகிறது. கடைத் தெருவிற்கு
செல்ல வேண்டிய தேவை இருந்தும் அங்கே அனாச்சாரமான செயல்கள் நடைபெறுகிறது எனக்
கேள்விப்பட்டு அவர் வீட்டிலேயே இருந்துவிட்டார் என்றால் அதற்கும் நன்மைகள்
எழுதப்படுகிறது. எனவே, நாம் கடை தெருவிற்கு செல்லும் பொழுது பார்க்கின்ற அனைவருக்கும்
ஸலாம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு புறப்பட்டோம் என்று சொன்னால் அதற்கு தனியாக
நமக்கு நன்மைகள் எழுதப்படுகின்றன.
நபி பெருமானார் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர் இமாம் ஜாபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில்
ஆன்மிக பெரியார்கள் எல்லாம் இவ்வுலகில் குறைவான சுகத்துடனே இருக்க வேண்டும் என்ற
நோக்கத்தோடு மெலிதான ஆடைகளை அணியாமல் முரட்டுத்தனமான ஸூஃப் என்று சொல்லப்படும்
உல்லன் ஆடைகளையே அணிவார்கள். இதனால் தான், அவர்களுக்கு ஸூஃபியாக்கள் என்று
சொல்லப்படுகிறது. பெரும் செல்வந்தராக இருந்த இமாம் ஜாபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு
அவர்கள் அனுமதிக்கப் பட்ட உயர்ரக ஆடைகளே அணிவார்கள். அதைக் கண்ட ஒருவர் நீங்கள்
ஆன்மிக பெரியாராக இருந்தும் இவ்வுலக சுகத்திற்கு ஆசைப்படுகிறீர்களே என்றார்.
அதற்கு இமாம் அவர்கள் அணிந்திருந்த சட்டையை கழட்டினார்கள். உள்ளே, முரட்டுத்தனமான
உல்லன் ஆடையையே அணிந்திருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ் எனக்கு செல்வத்தை
அளித்திருக்கிறான் நான் எளிய ஆடையை அணிந்து சென்றால் என்னை ஏழை என்று நினைத்து
யாரும் என்னிடத்தில் உதவி கேட்க மாட்டார்கள். நான் செல்வந்தர் என்று காட்டுவதற்காக
வேண்டி நான் உயர்ரக ஆடைகளை அணிகிறேன். அதைப் பார்த்து, இவர் செல்வந்தர் என்று
நினைத்து என்னிடத்தில் உதவி கேட்பார்கள். இவ்வுலகில் குறைவான சுகம் பெற வேண்டும்
என்பதற்காக தான் முரட்டு ஆடையை உள்ளே அணிந்து இருக்கிறேன் என்றார்கள்.
ஆடை அணிவதிலும் அபரிதமான
நன்மையை பெறலாம், தூய எண்ணம் இருந்தால். காரி தய்யுப் சாஹிப் அவர்கள் இன்னொரு
பெரியாரைப் பற்றி சொன்னார்கள் அவரின் பெயர் மறந்து விட்டது. வணக்கசாலியான அவர்
பெரும் செல்வந்தராகவும் இருந்தார். தான தர்மங்கள் செய்பவராக இருந்தார். அவர்
திடீரென அதிகமான புது ஆடைகளை வாங்க ஆரம்பித்தார். அவைகளை ஓரிரு முறை உபயோகித்து
விட்டு அப்படியே பெட்டியில் வைத்து விடுவார். இதை கவனித்து கொண்டிருந்த அவரின்
நண்பர் என்ன வீண் ஆடம்பரம் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர் எனக்கு மவ்த்
நெருங்கி விட்டதாக நான் உணர்கிறேன். என் மவ்த்திற்குப் பின்னால் என் வாரிசுகள்
எந்த அளவிற்கு தர்மம் செய்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நமது ஊரில் ஒரு
வழக்கம் இருக்கின்றது. மவ்த்தானவர்களின் ஆடையை குடும்பத்தார் அணியாமல் ஏழைகளுக்கு
கொடுத்து விடுவார்கள். எனவே, என் மவ்த்திற்குப் பின்னால் ஏழைகள் என் ஆடையை அணிய
வேண்டும் என்பதற்காக தான் இது போன்று நான் ஆடைகளை வாங்குகிறேன் என்று சொன்னார்.
ஒரு மாணவர் தான் கட்டிய
புதிய வீட்டிற்கு தனது ஆசிரியரை அழைத்து சென்றார். அந்த வீட்டில் ஜன்னல்கள் உயரமான
இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஹஜ்ரத், ஏன் ஜன்னலை உயரமாக வைத்திருக்கிறாய் என்று
கேட்டார்கள். நன்றாக காற்று வர வேண்டும் என்பதற்காக வைத்திருக்கிறேன் என்று அவர்
சொல்ல, அடடா! ஒரு நன்மையை இழந்து விட்டாயே! உயரமான இடத்தில் ஜன்னலை வைத்தால்
பள்ளியில் சொல்லப்படும் பாங்கு நன்றாக கேட்கும் என்ற நோக்கத்தோடு வைத்திருந்தால்
நன்மையும் கிடைத்திருக்கும் காற்றும் தானாக வந்திருக்கும் என்று சொன்னார்.
இவ்விதம் ஒவ்வொரு
செயலிலும் அல்லாஹ்வின் திருப்தியை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்தால் இம்மை,
மறுமை இரண்டிலும் நன்மைகளைப் பெறலாம்....................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக