வழக்கமும்,வணக்கமும்
நாம் தினந்தோறும் செய்து வரும் செயல்களை –
உண்ணல்,குடித்தல்,உறங்குதல்,உறவாடல்,வியாபாரம் செய்தல் போன்றவைகளையே வழக்கம்
என்கிறோம். வணக்கம் என்று எதனைச் சொல்கிறோம்? இறையில்லம் சென்று தொழுதல், குர்ஆன்
ஓதுதல், திக்ரு செய்தல், நோன்பு நோற்குதல் போன்ற நன்மை கிடைக்கும் எனக் கருதிச்
செய்யும் செயல்களையே வணக்கம் என்கிறோம். ஒரு குறிப்பிட்ட செயல்களையே வணக்கம் என
வரையறுத்து அதனை ஒரு வட்டத்திற்குள் ஆக்கி வணக்கத்தையும் வழக்கமாகிக் கொள்கிறோம்.
இது தவறான ஒன்று. வணக்கமாக கருதப்படும் ஒரு செயல் அல்லாஹ்விடம் ஏற்றுக்
கொள்ளப்படாமல் தூக்கி எறியப்படலாம். அதே நேரத்தில் ‘வழக்கம்’ என பிறர் எண்ணும் ஒரு
செயல் இறைவனிடம் வணக்கமாக மாறி அச்செயலி னைச் செய்த மனிதனுக்கு அபரிதமான நன்மையைத்
தரலாம். நாம் செய்கின்ற காரியங்கள் வணக்கமாகி அல்லாஹ்வின் பால் ஏற்றுக் கொள்ளப்பட
என்ன செய்ய செய்ய வேண்டும் என்கிறீர்களா? விடை இலகுவானது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் காட்டிய வழி முறையில் செய்யப்படும் அனைத்துச் செயல்களுமே
வணக்கம்தான். பள்ளிக்குச் சென்று தொழுவதும், திக்ரு செய்வதும் தான் வணக்கம்
என்றும், குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவது வியாபாரம், தொழில், போன்றவைகளில்
ஈடுபடுவது வணக்க வழிபாடுகளில் சேராது என எண்ணுகிறோமே அது தவறு. இல்லற வாழ்க்கையில்
ஈடுபடும் நாம் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வழிமுறையில் செயல்பட்டால் அதுவும்
வணக்கமாகிவிடும். நம் எண்ணம் தான் முக்கியம். நோன்பை எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவன்
பகல் முழுவதும் எவ்வித குறிக்கோளுமின்றி பசியும் பட்டினியுமாக பொழுதைக் கழித்தால்
எவ்வித நன்மையையும் அவனுக்கு கிடைக்காது. ஆனால், அவனே அல்லாஹ்வின் ஆணைக்குக்
கட்டுப்படும் எண்ணத்துடன் பசித்திருந்தால் அது இறைவனின் திருப்தியைப் பெற்று தருவதுடன்
சிறந்த வணக்கமாக மாறிவிடுகிறது. இதனால் தான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் “செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்ததே” என்றார்கள். வழக்கங்கள்
வணக்கமாக எவ்வளவு எளிய வழி பாருங்கள். நாம் இவ்வுலக காரியங்கள் என எண்ணுபவை
மறுமையில் பலன்தரும் செயல்களாகி விடுகின்றன. எவ்வளவு லாபகரமான பரிமாற்றம்.
துன்யா என்றால் என்ன?
லால்பேட்டை அரபிக்
கல்லூரியில் மாணவனாக நான் இருந்த பொழுது முப்தியுல் அஃலம் ‘கைருல் மில்லத்’ அல்லாமா
அப்துல்லாஹ் ஹஜ்ரத் (ரஹ்) அவர்கள். “துன்யாவை வெறுக்க வேண்டும். துன்யாவிற்காக
வாழக் கூடாது என்கிறார்களே. துன்யா என்றால் என்ன? என எங்கள் வகுப்பில் கேட்டனர்.
இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது என்றார் ஒருவர். திருமணம் செய்து குடும்பம்
நடத்துவது துன்யா என்றால் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அதனை ஏன் வலியுறுத்தியுள்ளார்கள்
என்றார்கள் ஹஜ்ரத். பொருள் தேடுவது என்றார் மற்றொரு மாணவர். தொழுகை முடித்து
விட்டால் பூமியெங்கும் பரவி அல்லாஹ்வின் அருளான பொருளைத் தேடுங்கள்” என குர்ஆன்
கூறுகிறதே எனக் கூறி புன்னகை புரிந்தார்கள். ஒவ்வொரு மாணவரும் மனிதர்கள்
விரும்பும் ஒவ்வொரு செயலினை கூற அத்தனைக்கும்
ஒரு பதிலைக் கூறி அந்தச் செயலினை சரி தான்
என்றார்கள். இறுதியில் பொறுமை இழந்த நாங்கள் தாங்களே சொல்லுங்கள் என்றோம்.
“எவையெல்லாம் அல்லாஹ்வின்
நினைவை விட்டும் உன்னை மறக்க வைக்கிறதோ அவையெல்லாம் துன்யா” என்றார்கள்.
ஆம்! அல்லாஹ்வின் நினைவின்றி
நாம் தொழுதால் அதுவும் துன்யா தான். வீண் பகட்டுக்காக தான தர்மம் செய்தால் அதுவும்
துன்யா தான். அதற்கு மாற்றமாக மனிதன் அல்லாஹ்வின் நினைவுடன் அவன் திருப்தியைப்
பெறும் நோக்குடன் செய்யும் காரியங்கள் அனைத்தும் மறுமைக்கானது. அதற்கான நன்மை
உண்டு. அது வெளிரங்கத்தில் இவ்வுலகத்திற்கான
செயலாகத் தெரிந்தாலும் சரியே.
உணவு உண்பதும் வணக்கமே
உதாரணமாக ஹதீஸில்
கீழ்கண்டவாறு வருகிறது. ஒருவன் அல்லாஹ்வின் பெயரால் என உணவு உண்ணத் துவங்கி அல்லாஹ்விற்கே
அதிகமான புகழனைத்தும் என உண்ணுவதை முடித்தால்அவனுடைய முன்பின் செய்த சிறு பாவங்கள்
மன்னிக்கப்படுகின்றன’ வெறும் எண்ணத்தினால் ஏற்படும் இரட்டை பலன்களைப் பாருங்கள்.
இவ்வுலக- துன்யாவின்- பலனான வயிறும் நிரம்பிவிடுகின்றது. மறுமை- தீனுடைய பலனான-
பாவ மன்னிப்பும் கிடைக்கிறது. இஸ்லாம் விரும்புவதும் இதைத்தான். மிஸ்வாக் செய்வதை
எடுத்துக் கொள்ளுங்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மிஸ்வாக்
செய்வது வாயை சுத்தப்படுத்துகின்றது. இரட்சகனின் திருப்திக்கும் காரணமாக
இருக்கிறது” இங்கேயும் இம்மையில் உடனடிப் பயனான வாய் சுத்தம் ஏற்பட்டு மன
மகிழ்ச்சி கிடைக்கிறது. மறுமையில் இறைவனின் சந்தோஷமும் நமக்கு கிடைக்கிறது.
இவ்விதம் இஸ்லாத்தின் ஒவ்வொரு செயலிலும் ஒரு பாதை இவ்வுலக நன்மையை
மனதிலிருத்தியும், மறுபாதை மறுமையின் பலனை முன்னிறுத்தியும் அமைந்துள்ளது.
ஹலாலான முறையில் வியாபாரம்
செய்து வேண்டும் சம்பாதித்து தன் குடும்பத்தை காப்பதுடன்
ஜாக்கத்தும் கொடுக்க வேண்டும் எனு ம் நோக்குடன் ஒருவன் வியாபாரம் செய்தால் அதுவும்
வணக்கம்தான்
எனவே தான் நேர்மையான வியாபாரி அர்ஷின் நிழ்லில் இருப்பார்
என ஹதீஸில் வந்துள்ளது
இவ்வாறு அல்லாஹ்வின்
திருப்தியை பெரும் நோக்குடன் செய்யப்படும் அல்லாஹ் அனுமதித்த அனைத்து செயல்களும்
வணக்கமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக