அனுமதிக்கப்பட்ட செயல்கள் அனைத்தும் வணக்கமே
இபாதத் என்ற வார்த்தையைத் தான் நாம் இங்கு வணக்கம் என்று சொல்கிறோம்.
மனிதன் தொழுகிறான் என்றால் ஒரு நாளைக்கு அதிகப்பட்சம் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை
மணி நேரம் தொழலாம். தொழுவது மட்டுமே இபாதத், வணக்கம் என்றால் ஒரு வணக்கம் என்பது
மிக குறுகிய நேரமே செய்யும் செயலாகி விடும். மனிதன் பலகீனத்தை அறிந்த அல்லாஹ் அவன்
வாழ்கின்ற குறுகிய காலத்தில் அதிகமான நன்மையை பெற இலகுவான வழியை காண்பித்துள்ளான்.
அதுதான் அல்லாஹ்வின் திருப்தியை பெற வேண்டும் என எண்ணி செய்யும் செயல்கள்..
நாம் அவசியம் என கருதி
செய்யும் செயல்களை அல்லாஹ்வும் ரசூலும் காட்டி தந்த பாதையில் செய்தால் அது இபாதத்
செய்த நன்மை கிடைப்பதுடன் இந்த உலகத்தில் கிடைக்க வேண்டிய பலனும் கிடைக்கிறது.
உமர் (ரலி) அவர்கள் செய்த உபதேசம்
ஹளரத் உமர் (ரலி) அவர்கள்
உடல் நலம் குன்றியிருந்த பொழுது அவரைச் சந்திக்க ஒரு இளைஞர் வந்தார். அவர்
திரும்பிச் செல்ல முனைந்த பொழுது ஹளரத் உமர் (ரலி) அவர்கள் அவ்விளைஞரை திரும்ப
அழைத்து, “சகோதரனே! உன்னுடைய ஆடையை உயர்த்திக் கொள். அது உன்னுடைய ஆடையைச்
சுத்தமாக வைத்திருக்கும். மேலும், உன்னுடைய இரட்சகனையும் திருப்திப்படுத்தும்.”
என்றார்கள். இங்கும் இரு நன்மைகள் கிடைக்கின்றன. “ மறுமை நாளில் மூன்று நபர்களை
அல்லாஹ் கருணையுடன் பார்க்க மாட்டான்” என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்
கூறியுள்ளார்கள். அவர்களில் ஒருவன் தன் ஆடையை கரண்டைக் காலுக்கு கீழே பெருமையுடன்
தொங்கவிட்டு நடப்பவன். அது இறைவனின் கோபத்திற்கு காரணமாக அமைகிறது. அவன் ஆடையை
உயர்த்திக் கட்டி நடக்கும் பொழுது இறைவனின் கோபத்திலிருந்து அவன் விடுப்பட்டு
அவனின் சந்தோஷத்திற்கு ஆளாகிறான். இது ஒரு நன்மை. மற்றொன்று மனிதனின் ஆடை
பூமியிலிருக்கும் அழுக்குகளை விட்டும் சுத்தமாக இருக்கும்.
ஆடையை உயர்த்திக் கட்டுவதில்
இன்னொரு பெரிய நன்மை இருக்கிறது. வியாதியை உண்டாக்கும் கிருமிகள் பரவுவதற்கு
ஆடையும் ஒரு காரணம் என மருத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக தரையில்
சில விஷக் கிருமிகள் ஊர்ந்து திரிகின்றன. அவை மனிதனின் ஆடையின் மூல நேராக அவன்
இதயத்தில் நுழைந்து விடுகின்றன. இது ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் அதிகம் என்றும்
மருத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆடையை உயர்த்திக் கட்டுவது இது போன்ற
நன்மைகளைத் தருகிறது. ஒருவன் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறும் நோக்குடன் ஆடையை
உயர்த்திக் கட்டும் பொழுது இவ்வுலகின் நன்மையையும் சேர்ந்தே கிடைக்கின்றது.
எனவே, ஒவ்வொரு செயலிலும்
இரண்டு கண்ணோட்டங்கள் இருக்கின்றன. உங்களின் நோக்கம் எதன் பக்கம் அமைகிறதோ அதுதான்
கிடைக்கும். இவ்வுலக பலனை பெறும் நோக்குடன் செயல்பட்டால் நாம் எண்ணியது மட்டுமே
சில வேளை கிடைக்கும். கிடைக்காமலும் போகலாம். மறுமையில் ஒன்றுமே கிடைக்காது.
மாறாக, மறுவுலக நலனை மனதில் வைத்து நாம் செயல்பட்டால், மறுமையின் பலன் மட்டுமல்ல
இவ்வுலக பலனையும் பெற வழிக் வகுக்கிறது.
எனவே தான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறியுள்ளார்கள். மனிதனுக்கு கிடைப்பது எல்லாம் அவன் நாடிய அளவே என்றார்கள்.
இல்லாளுடன் இன்புற்று இருப்பதும் இபாதத்தே
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “உங்களின் மர்மஸ்தானத்திலும் தர்மம் இருக்கிறது” என்ற
பொழுது வியப்படைந்த நபித் தோழர்களில் ஒருவர் “எங்களில் ஒருவர் தன் மன இச்சையினைப்
பூர்த்தி செய்து கொள்ளும் நோக்குடன் தன் மனைவியை நெருங்குகிறார் அதிலும் அவருக்கு நன்மை கிடைக்குமா என்ன? என
வினவினார் “.அதே நீர் ஹராமான விலக்கப்பட்ட இடத்தில் விழுந்தால் பாவம் இல்லையா?
அவன் அத்தகைய பாவத்தை விட்டும் நீங்கும் பொழுது அது இபாதத்தாக வணக்கமாகிவிடுகிறது
என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எனவே தான் காம
இச்சையைப் பூர்த்தி செய்வதிலும் இரு நோக்கங்கள் உள்ளன. ஒன்று வெறும் தன் மன
இச்சையை நிறைவேற்றும் நோக்குடன் மனைவியை அணுகுவது. மற்றொன்று, “இறைவன் வகுத்த
நியதிப்படி – முறை தவறி நடப்பதை விட்டும் – என்னைப் பாதுகாக்க என் மனைவியிடம்
இன்பம் பெறுகிறேன்.” எனும் நோக்குடன் தன் மனைவியை அணுகுவது. இப்படி தன் நோக்கினைக்
குறிப்பாக்கும்போழுது அது வணக்காமகிவிடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக